தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது - அதிரடி காட்டிய போலீசார்
கே.வி.குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்றரை லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், கே.வி குப்பம் சந்தைமேடு பகுதியில் நேற்று காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்களை கேட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கே.வி.குப்பம், பி.கே.புரம் வடுகன்தாங்கல், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, குடியாத்தம் தாழையாத்தம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், குடியாத்தம் ஆர்.எஸ் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுவன், கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த மூர்த்திரவி, குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், கே.வி குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் திருடின 7 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் மதிப்பு சுமார் 3.5 லட்சம் என்று தெரிவித்தனர்.
தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.