3-வது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் - பச்சிளம் குழந்தையை உயிரோடு துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்!

crime
By Nandhini Jul 17, 2021 08:01 AM GMT
Report

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி கஸ்தூரி (27). இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

சில நாட்களிலேயே மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல், அங்கிருந்து கஸ்தூரி குழந்தையுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து, மருத்துவமனை மருத்துவர்கள் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதனையடுத்து, அவரிடம் சுகாதாரத் துறையினர் தொடர்பு கொண்டு விசாரித்த போது, திடீரென குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறினார் கஸ்தூரி. இது குறித்து, அதிகாரிகள் நேரில் விசாரித்தபோது குழந்தையை புதைத்து விட்டதாக கூறி இருக்கிறார்.

கஸ்தூரி மீது சந்தேகமடைந்த எருமப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் லலிதா, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து, எருமப்பட்டி போலீசார் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில், குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் கஸ்தூரியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரத்தில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை சுவரில் வேகமாக இடித்து, துடிக்க துடிக்க கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டார்.

3-வது பெண் குழந்தை பிறந்ததால் தாயே பெற்ற குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

3-வது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் - பச்சிளம் குழந்தையை உயிரோடு துடிக்க துடிக்க கொன்ற கொடூர தாய்! | Crime