இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை - என்ன காரணம்?
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
நமன் ஓஜா
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான நமன் ஓஜா, இந்திய அணிக்காக சில போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான போட்டிகளிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வங்கி பண மோசடி
தற்போது நமன் ஓஜாவின் தந்தையான வினய் ஓஜாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது நீதிமன்றம்.
கடந்த 2013-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் நகரில் உள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி கிளையில் வங்கி அதிகாரிகளின் பாஸ்வோர்ட்டை பயன்படுத்தி, முகவர்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி ரூ.1.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது.
இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். 11 வருடங்களுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
7 ஆண்டுகள் சிறை
மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி மேலாளரான நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வங்கியுடன் தொடர்புடைய தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வேற்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் கேஷியராக பணியாற்றிய தினாநாத் ரத்தோர் வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்தார். பயிற்சி கிளை மேலாளராக பணியாற்றி வந்த நிலேஷ் சத்ரோல் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். இவரது ஐடி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி தான் மோசடி செய்யப்பட்டுள்ளது.