ஒலிம்பிக்கில் இடம் பெற உள்ள கிரிக்கெட் - பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
2028 லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி நேற்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டி, அடுத்த முறை 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரிலும் சில புதிய விளையாட்டுகள் சேர்க்கப்படுவதும், பழைய போட்டிகள் நீக்கப்படுவதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று. இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் பிரேக் டான்சிங் என்ற புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரிக்கெட்
2028 ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை கூட நீக்கப்பட வாய்ப்புள்ளது. குத்துச்சண்டை ஒலிம்பிக்கில் இருக்குமா இல்லையா என்பது குறித்து உறுதிப்படுத்த IBA க்கு 2025 வரை காலக்கெடு உள்ளது. அதே சமயம் 2028 ஒலிம்பிக்கில் 6 புதிய விளையாட்டுகள் அறிமுகபடுத்தப்பட உள்ளது. Flag football, ஸ்குவாஸ், பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் போன்ற விளையாட்டுகள் அறிமுகமாக உள்ளது.
முக்கியமாக, 2028 ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே பங்கு பெற்றன. இதில் இங்கிலாந்து அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றது.
கிரிக்கெட்டிற்கு இந்தியாவில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், 2028 ஒலிம்பிக்கில் இந்தியா கிரிக்கெட்டில் தங்கம் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பொழுதே உருவாகி உள்ளது.