‘’உள்ள வந்தா பவரடி , அண்ணன் யாரு தளபதி ‘’ சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் - இங்கிலாந்தை பார்சல் செய்யுமா ஆஸ்திரேலியா?
ஆஷஸ் தொடர் 2021-ல் பிரிஸ்பனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணி 343/7 என்று முடித்தது. இங்கிலாந்தைக் காட்டிலும் 196 ரன்கள் முன்னிலை. டிராவிஸ் ஹெட் காட்டடி தர்பாரில் 95 பந்துகளில் 112 நாட் அவுட் என்றும் மிட்செல் ஸ்டார்க் 10 நாட் அவுட் என்றும் களத்தில் நிற்கின்றனர்.
இடது கை வீரர் டிராவிஸ் ஹெட் இந்த டெஸ்ட்டுக்கு வருவதற்கு முன்னால் இவருக்குக் கடும் போட்டியாகத் திகழ்ந்தவர் உஸ்மான் கவாஜா, இருப்பினும் இவரை அணியில் எடுத்த காரணம் என்னவென்று புரிந்தது, ஒரு நாள் இன்னிங்ஸ் போல் இங்கிலாந்து பவுலிங்கை எந்த வித அச்சமுமின்றி வெளுத்து வாங்கி விட்டார்.
மார்க் உட் பந்தில் ஒரு முறை முழங்கையில் பலத்த அடிவாங்கி கட்டுப் போட்டுக் கொண்டு அடுத்த பந்தையே வெறிகொண்டு பாயிண்டில் மண்டிப்போட்டு பவுண்டரிக்குப் பறக்கவிட்ட ஆக்ரோஷமே இவரை யார் என்று காட்டிவிட்டது
நடுவில் ஆஸ்திரேலியா 166/1 என்ற நிலையிலிருந்து சறுக்கியது மார்னஸ் லபுஷேன் 117 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 74 ரன்கள் என்று எந்த வித சிரமமுமின்றி சதத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர்.
வார்னருடன் சேர்ந்து 156 ரன்களை சேர்த்து இங்கிலாந்தை வறுத்தெடுத்தவர் இன்றைய தினத்தின் மோசமான பவுலரான ஜாக் லீச் வீசிய பந்தை கட் செய்கிறேன் என்று நேராக பாயிண்டில் கேட்ச் கொடுத்து வெளியேற மினி கொலாப்ஸ் தொடங்கியது.
ஸ்டீவ் ஸ்மித் பாசிட்டிவாக ஆடி 12 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் உட் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். அதிக அதிர்ஷ்டத்துடன் ஆடிய வார்னர் நன்றாக ஆடினார்.
அவர் 94 ரன்களில் ஆலி ராபின்சன் பந்தை கவர் திசையில் அடிக்கப் போய் பந்து கொஞ்சம் நின்று சற்றே எழும்பியதா என்று தெரியவில்லை, மட்டையின் மேல் பகுதியில் பட்டு கவரில் கேட்ச் ஆனார்.
அடுத்த பந்தே கேமரூன் கிரீன், ராபின்சனின் இன்ஸ்விங்கரை ஆடாமல் விட்டு பவுல்டு ஆகி டக் அவுட் ஆக ஆஸ்திரேலியா 166/1-லிருந்து 195/5 என்று ஆனது, இதற்கிடையேதான் இறங்கினார் நம் டிராவிஸ் ஹெட்.
இறங்கியது முதல் எதிர்த்தாக்குதல் நடத்தினார். 85பந்துகளில் சதம் கண்டார். இது 3வது அதிவேக ஆஷஸ் சதம் என்பது குறிப்பிடத்தக்கது ஒருமுரை ஆடம் கில்கிறிஸ்ட் 57 பந்துகளில் அடித்த சதமே ஆஷஸ் அதிகவேக சதத்தில் நம்பர் 1. அதே போல் பிரிஸ்பனில் ஒரு செஷனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ஹெட்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை 29 ரன்களுக்குக் கைப்பற்றியது அப்போது ஆஸ்திரேலியா 48 ரன்களே முன்னிலை பெற்றிருந்தது 5 விக்கெட்டுகள் கையில் இருந்தது, அங்கிருந்து கேட்ச் டிராப்கள் மூலம் ஆஸ்திரேலியா 200 ரன்கள் முன்னிலை பெற இன்னும் 4 ரன்களே உள்ள நிலைக்கு உயர்ந்த்து.
இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மார்க் உட் ஒரு வொர்க் ஹார்ஸ், ஆனால் அதிர்ஷ்டமில்லை. 150 கிமீ வேகம் வீசுகிறார்.
ஜாக் லீச்சை போட்டு சாத்தி எடுத்தனர் 11 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டார், இது ஒரு சாதனையாகும் லபுஷேன் விக்கெட் கூட ஓசி விக்கெட்தான்.
பென் ஸ்டோக்ஸ் 9 ஓவர் 50 ரன்கள் விளாசப்பட்டார். ஜோ ரூட் 6 ஓவர் வீசி கடைசியில் பாட் கமின்ஸ் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
நாளை 3ம் நாள் 200-250 ரன்கள் வைத்து நாளைக்கே இங்கிலாந்தை பார்சல் முனையுமா ஆஸ்திரேலியா என்பதைப் பார்க்க வேண்டும்.