அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்திய 20 ஸ்டேடியங்களுக்கு நோட்டீஸ் - உலகக்கோப்பை சிக்கலா?
என்ஓசி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்திய கிரிக்கெட் ஸ்டேடியங்களுக்கு நிலத்தடி நீர் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
20 மைதானங்களுக்கு நோட்டீஸ்
கழிவு நீர் நிலையங்களில் (STPs) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துதல் மற்றும் நிலத்தடி நீரை நிரப்ப உதவும் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவுதல் போன்ற மாற்று வழிகள் இல்லாமல் கிரிக்கெட் ஸ்டேடியங்களின் பராமரிப்பிற்காக நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT ) மனு ஒன்று தாக்கள் செய்யப்பட்டது.
அந்த மனுவில் வணிக மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஐபிஎல் போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஜல் சக்தி அமைச்சகத்துக்கு (MoJS) என்ஜிடி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள 26 கிரிக்கெட் ஸ்டேடியங்களில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் பிரதிநிதிகள் ஆய்வு மேற்கொண்டதில், அவற்றில் 24 ஸ்டேடியங்கள் போர்வெல்களை அல்லது குழாய் கிணறுகளை பயன்படுத்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம், நாக்பூரில் உள்ள வி.சி.ஏ ஸ்டேடியம், ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியம் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட நான்கு ஸ்டேடியங்கள் மட்டுமே என்ஓசி (NOC) பெற்றுள்ளனர்.
புது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் ஆகியவை நிலத்தடி நீரை எடுப்பதற்கு என்ஓசி பெறவில்லை. இதனால் கடந்த ஜூன் மாதம் அந்த 20 மைதானங்களுக்கு மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
அதில், “சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து ஏன் என்ஓசி கோரப்படவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கவேண்டும்” என உத்தரவிட்டது. தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் ஜல் சக்தி அமைச்சகம் மூன்று மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவ கிரிக்கெட் சங்கங்களை கேட்டுக் கொண்டது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு சுற்றுச் சூழல் இழப்பீடு ஏன் விதிக்கக் கூடாது என்றும் கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 20 ஸ்டேடியங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டாலும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிகிறது.
அந்தந்த கிரிக்கெட் ஸ்டேடியங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயம் சொன்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை, தர்மஷாலா, லக்னோ, புனே மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.