மாஸாக மதுரையில் உருவாகி வரும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் - அடடா இத்தனை வசதிகளா..?
வேலம்மாள் குழுமம் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் மைதானம்
உலகிலேயே அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் பெற்றுள்ளது.
ஆனால் தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானம் மட்டுமே சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ற வசதிகளுடன் உள்ளது. பிற மாவட்டங்களைப் பார்த்தால் நெல்லையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன மைதானத்தில் மட்டுமே “டர்ஃப் பிட்ச்” எனப்படும் புல்தரை ஆடுகளம் இருந்தது.
மேலும் கோவை,சேலம், தேனி, நத்தம் உள்ளிட்ட நகரங்களில் புல்தரை ஆடுகளங்களுடன் கூடிய கிரிக்கெட் மைதானங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், மதுரை மாவட்ட மக்களுக்கு கிரிக்கெட் மைதானம் என்பது நீண்டகால கனவாக இருந்து வருகிறது.
இனி மதுரையிலும்
இந்நிலையில் மதுரை வேலம்மாள் குழுமம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், மதுரை மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, தங்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
சேப்பாக்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் மேற்கூரை வசதியுடன் கூடிய கேலரிகள் கொண்ட பெரிய அரங்கமாக இது அமைக்கப்பட உள்ளது. இந்த மைதானம் 75 மீட்டர் தூர பவுண்டரி எல்லை, வீரர்களுக்கான பெவிலியன், 800 பேர் அமரக்கூடிய குளிர்சாதன வசதியுடனான விவிஐபி கேலரிகள் மற்றும் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பார்வையாளர்களுக்கான நிழற்கூரையுடன் கூடிய நிரந்தர கேலரிகள் அமைக்கப்படுகிறது.
மேலும் மழையால் போட்டிகள் தடைப்படாமலிருக்கும் வகையில், மழை நின்ற அரை மணி நேரத்தில் மைதானம் தயாராகும் வகையில் வடிகால் வசதிகள், மின்னொளி வசதியுடன் 10 பயிற்சி ஆடுகளங்கள், 60 பேர் வரை தங்கி பயிற்சி பெறுவதற்கான வசதிகளும் இடம்பெறுகின்றன.
முதற்கட்டமாக 7,000 பேர் அமரும் வசதியுடன் மைதானம் அமைக்கப்படுகிறது. அடுத்த கட்டங்களில் 20,000 பேர் அமரும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளது. மதுரை கிரிக்கெட் ரசிகர்கள், இனி உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும், கிரிக்கெட் வீரர்களையும் மதுரையிலேயே காணும் காலம் விரைவில் நனவாக உள்ளது.