தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி - எங்கு தெரியுமா?
வாக்குறுதி
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே இந்த தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுவிட்டது. இதற்கிடையே அந்த தேர்தல் அறிக்கையில் மற்றொரு வாக்குறுதியை சேர்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது கோவையில் சர்வதேச தரத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
கிரிக்கெட் மைதானம்
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதியை சேர்த்துக் கொள்கிறேன். விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேற்கோள்காட்டியபடி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக கோவையில் அமைய உள்ள மைதானம் தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச மைதானமாக அமையும்.
விளையாட்டு திறனை ஊக்குவிப்பதிலும், தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.