“இதை பண்ணி தான் இந்திய அணி ஜெயிக்கிராங்க” - பாகிஸ்தான் வீரர்

cricket pakistan player salman butt talks about indian team
By Swetha Subash Dec 19, 2021 05:51 AM GMT
Report

இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளைக் குவிப்பதற்கு இதுதான் காரணம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விளக்கம் அளித்துள்ளார்.

விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாறு காணாத வகையில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இரண்டு முறை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்கு இது மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

கொரோனா காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. ஜூலை 2022ஆம் ஆண்டுக்கு கடைசி போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தென் ஆப்பிரிக்கா சென்றிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி எவ்வாறு எளிதாக வெற்றிகளை பெறுகிறது எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

“இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக எளிதாக வெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளை குவிக்கிறது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் வெற்றிகளை பெறுவது அவ்வளவு எளிதல்ல.

அதனை இந்தியா செய்து முடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணி அங்கு செல்வதற்கு முன்பாக, இந்திய ‘ஏ’அணியை அனுப்பி 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வைக்கிறது.

பிறகு அவர்களிடம் மைதானம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, எதிரணியை திணறடித்து வெற்றிகளை பெறுகிறது.

இதற்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இப்படியான யுக்தியை பயன்படுத்தியுள்ளனர். இதனை மற்ற அணிகள் செய்வதில்லை. இனியும் அவர்கள் செய்வார்கள் என்று தெரியவில்லை.” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் வெற்றியை பெற்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் இதுவரை ஒரு முறை கூட தொடரை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்று தங்களது முதல் நாள் பயிற்சியை முடித்துள்ளனர். டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.