"அவர் ஒரு முறை என்னிடம் கூறிய வார்த்தை மறக்கவே முடியாது, எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்" - மனம் கலங்கிய அஷ்வின்

cricket aswin opens up about leaving him behind
By Swetha Subash Dec 21, 2021 09:00 AM GMT
Report

கடந்த 2018ம் ஆண்டிலேயே, தான் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய கடின சூழல்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். சுழற்பந்துவீச்சாளரான இவர் தற்போது தரமான கம்பேக் கொடுத்து வருகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு வரை அதிக வாய்ப்புகளை பெற்று வந்த அஸ்வின், அதன் பிறகு இருக்கிறாரா? இல்லையா? என்பதை போல ரசிகர்கள் எண்ணிவிட்டனர்.

இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஜோடியின் பவுலிங்கை பார்த்து உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திணறியவர்கள் உண்டு. ஆனால் 2017ம் ஆண்டுக்கு பிறகு அஸ்வினுக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளிலும் அதிக நேரம் பெஞ்சிலேயே தான் இருந்தார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் வெற்றிகளை பெற்று தந்த அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என கோலியின் மீது ரசிகர்கள் கோபப்பட்டதும் உண்டு.

இந்நிலையில் அப்படி பட்ட சூழல்கள், தான் ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்ததாக அஸ்வின் மனம் உருகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரிக் இன்ஃபோ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள அஸ்வின்,

நான் பல்வேறு காரணங்களுக்காக 2018 - 2020 காலக்கட்டத்திலேயே ஓய்வு அறிவித்திருப்பேன்.

பல்வேறு வீரர்கள் அணிக்குள் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் எனது காயம் குறித்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது போல தோன்றும்.

அணிக்காக பல முறை வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளேன். எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும். 2018 - 19ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியின் போது, எனக்கு வயிற்றுப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது எனக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இனி கிரிக்கெட் பயணம் முடிந்ததா என்று கவலையில் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் நான் மனம் திறந்து பேசும் ஒரே நபர் எனது மனைவி மட்டுமே.

என் தந்தையும் எனக்கு உறுதுணையாக இருப்பார். அவர் ஒரு முறை என்னிடம் கூறிய வார்த்தை மறக்கவே முடியாது.

அவர் உயிரழப்பதற்குள் நான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதை நிச்சயம் பார்ப்பார் எனக்கூறியதாக அஸ்வின் மனம் கலங்கினார்.

அந்த வார்த்தைகளுக்கு ஏற்றவாறே அஸ்வின் தற்போது தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.

2017ம் ஆண்டுக்கு பிறகு 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது வாய்ப்பு பெற்ற அஸ்வின் விக்கெட் மழை பொழிந்தார்.

இதன்பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான தொடர், தற்போது தென்னாப்பிரிக்க தொடர் என தொடர்ந்து வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.