கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ பட காட்சி வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா இணைந்து நடித்துள்ள பிரண்ட்ஷிப் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தவர் ஹர்பஜன் சிங்.
இவர் தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்ற புதிய தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர்கள் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் வில்லனாக நடிகர் அர்ஜூன் நடித்திருக்கிறார். ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் உதயகுமார் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் சதிஷ், ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், வெங்கட் சுபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கூடுதல் சிறப்பாக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.
அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாக உள்ளது. கல்லூரி மாணவராக ஹர்பஜன் சிங் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.