கோடி கணக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் கிடைக்கபோகிறதாம் - எப்படின்னு தெரியுமா?
கிரிக்கெட் உலகில் மிகவும் பணக்கார நாடாக விளங்கும் இந்தியா, ஐ.பி.எல். தொடரை நடத்தி பெரும் வெற்றியை கண்டது.
ஐ.பி.எல். வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டுக்கு என்று ஒரு கிரிக்கெட் லீக் தொடரை நடத்தின. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் அவ்வளவு பெரிய வெற்றியை பெறவில்லை.
இன்னும் சில ஆண்டுகள் கழித்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை அந்த நாடுகளுக்கு இருந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.எஸ்.எல். என்ற தொடரை தொடங்கியது. முதலில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது.
தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதால் போட்டிகளை சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
முதலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அதன் வர்த்தக முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வந்தது.
மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
இதனால் பி.எஸ்.எல். தொடரின் பக்கம் கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் சென்றன. இந்த நிலையில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ஒளிப்பரப்பு உரிமத்திற்கான ஏலம் நடைபெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு 180 கோடி ரூபாய் அளவு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு கிடைத்த வருமானத்தை விட 50 சதவீதம் கூடுதலாகும்.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இன்னும் வெளிநாட்டு உரிமத்திற்கான ஏலம் தொடங்கப்படவில்லை.
அதன் மூலம் கோடி கணக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் கிடைக்கும்.
இதனால் கஜானா நிரம்பிவிடும் என்று மகிழ்ச்சியில் உள்ளது பாகிஸ்தான்
இருப்பினும் ஐ.பி.எல். தொடரின் ஒரு சீசனின் மதிப்பு 3 ஆயிரம் கோடி ரூபாய். அதன் பத்து சதவீத மதிப்பை கூட பி.எஸ்.எல். தொடர் இன்னும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.