தோனியின் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா...!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை ஹர்திக் பாண்டியா சமன் செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இதனையடுத்து, நேற்று முன்தினம் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
தோனியின் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 33 ரன்களை எடுத்தார். இதன் மூலம் ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா 3 முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்திருக்கின்றனர். மேலும், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற தோனியின் சாதனையையும் இவர் சமன் செய்திருக்கிறார்.
அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 34 சிக்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி 34 சிக்ஸ் அடித்திருக்கிறார். இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் 31 சிக்ஸ்களுடன் இடம் பிடித்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில் ஹர்திக் பாண்டியாவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.