பரந்தூரில் நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் - CPIM சண்முகம் கோரிக்கை
cpim shanmugam request govt to return land in parandur: பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என CPIM தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம்
பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.
இந்த திட்டத்திற்காக குறிப்பிட்டளவிலான நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "கையப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களை பாதிக்காதவாறு மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும்.
திட்டம் குறிப்பிட்ட காரணங்களால் செயல்படுத்தப்படவில்லை எனில் அந்த நிலத்தை மற்ற பொதுத்திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது" என தெரிவித்தார்.
விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது.
பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
— Shanmugam P (@Shanmugamcpim) August 26, 2026
நிலம்… pic.twitter.com/qVX7Psqg9l
எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், "பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்ய முடியுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்க முடியும். ஆலோசனைக்குப் பிறகு, விவசாயிகளுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும். என கூறினார்.