தவெகவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்த சி.மகேந்திரன்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ க்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரன், தவெகவில் இணைந்துள்ளார்.

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்தது குறித்து பேசிய சி.மகேந்திரன், "அரசியலில் நான் வித்தியாசமானவர். தமிழகத்தில் உள்ள பல சிறைச்சாலைகளில் போராட்டங்களில் பங்கேற்று சிறையில் இருந்தவன் நான். 18 வயது முதல் இன்று வரை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக போராடி வருகிறேன்.
நான் ஏன் தவெகவிற்கு வந்தேன் என்பது முக்கியமானது. என்னுடைய சிகப்பு துண்டை எடுக்காமல் இங்கு செயல்பட வேண்டும்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சனை என்றவென்றால் ஊழல் ஒழிப்பு தான், அதனை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார்.
எனது அரசியலில் நான் வியந்து பார்த்தது என்னவென்றால் இந்த தேர்தல் ஜாதியை ஒழித்துள்ளது. மதத்தை ஒழித்து காட்டியுள்ளது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை ஒழித்து இந்திய ஜனநாயகத்தில் சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை தலைவர் தளபதி உருவாக்கியிருக்கிறார்" என பேசியுள்ளார்.
சி.மகேந்திரன் பின்னணி
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சி.மகேந்திரன், 1971 ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டார். சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் பெற்ற நிலையில், ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டின் இலக்கிய மாமணி விருது தமிழ்நாடு அரசால் இவருக்கு வழங்கப்பட்டது.