தோழர் நல்லகண்ணு மரணம்: தலைவர்கள் இரங்கல்

By Fathima Feb 25, 2026 10:28 AM GMT
Report

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

முதலமைச்சர் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!”

சீமான் இரங்கல்

ஒரு மாபெரும் தலைவர் மகத்தான தலைவரை நாடு இழந்திருக்கிறது. அடக்குமுறை எல்லாவற்றையும் கடந்து இந்த தலைமுறையும் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர். எவராலும் குறை சொல்ல முடியாத நபர். 100 ஆண்டுகால வரலாறு, ஒரு தலைவனுக்கு எளிமை, நேர்மை, தூய்மைக்கு சான்று. 

கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார். சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார். எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம் அவர். கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது கொண்டிருக்கும் மதிப்புக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கைமுறை ஒரு காரணம். சுதந்திர இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்றுவரை உயிர்ப்போடு இருப்பதற்கு நல்லகண்ணு போன்றோரின் தியாகமே காரணம். செயற்கை நுண்ணறிவு, எதிர்காலத்தில் இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும். அவர் வாழ்ந்தது ஒரு நூறாண்டு; அவரை மறக்காது இந்த நூற்றாண்டு. அவருக்கு என் செவ்வணக்கம்


தவெக தலைவர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

தோழர் நல்லகண்ணு மரணம்: தலைவர்கள் இரங்கல் | Cpi Leader Nallakannu Passed Away