தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம் - அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்
cpi and cpim rejects to participate in tvk alliance meet: தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
தவெக கூட்டணி அழைப்பை நிராகரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்
தவெக கூட்டணி கட்சிகளின் 2வது கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

இதில், கூட்டணியில் இடம் பெறாமல், ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியாக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தின.
இதில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படியில், இரு கட்சிகளும் நாளை நடைபெற உள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்குபெறப்போவதில்லை என அறிவித்துள்ளன.
மு.வீரபாண்டியன் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், "தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு எங்களது பாலன் இல்லத்திற்கு நேரில் வந்து தவெக தலைமையில் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குவது, அதற்குப் பெயர் சூட்டுவது தொடர்பான கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

அவர்களது அழைப்புக்கு மதிப்பளித்து, இன்று எங்களது நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விவாதித்தோம்.
நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படி, மக்கள் அதிகாரத்தின் மீது ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது. மக்கள் அதிகாரத்திற்கு மதிப்பளித்து, ஒரு மறைமுக பாஜக ஆட்சியைத் தடுக்கும் நோக்கில்தான் நாங்கள் தவெகவை ஆதரித்தோம்.
தவெக அரசுக்கு ஜனநாயக முறைப்படி நாங்கள் வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும். ஆனால், நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க இயலாது.
இந்த ஆதரவுக்கு முன்நிபந்தனைகள் ஏதுமில்லை. ஆனாலும் அதற்குள் 2 அரசியல் நிபந்தனைகள் இருக்கின்றன. ஒன்று மதச்சார்பின்மை; மற்றொன்று உழைக்கும், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகள்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயுஎம்எல், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் பங்குபெற உள்ளன.