‘’ அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே'’ : ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசு
பொள்ளாச்சி அருகே ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்கிவரும் பசுவின் பாசம் கிராம மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லியன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி. இவர் தனது வீட்டில் பசு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், குப்புசாமி வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று ஒரு மாதத்துக்குமுன்பு 4 குட்டிகளை ஈன்றது.
ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசு
அப்போது குட்டி ஈன்ற ஆட்டுக்கு போதிய அளவு பால் சுரக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், குப்புசாமி ஆட்டுக்குட்டிகளின் பசியைப் போக்க வீட்டில் வளர்க்கும் பசு மாட்டின் பாலை கரந்து ஆட்டுக்குட்டிகளுக்கு கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆட்டுக்குட்டிகள் தற்போது நடக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டதால்வீட்டில் வளர்க்கும் செவலை பசுவிடம் தானாகச் சென்று பசு மடியில் பால் குடித்து பசியாற்றி வருகின்றன.
தாய் அன்பு
தாய் அன்போடு அந்த பசு மாடும் ஆட்டுக்குட்டிகளை விரட்டி அடிக்காமல் பசியோடு வரும் ஆட்டு குட்டிகளை தான் ஈன்ற கன்று குட்டிகள்போல் அரவணைத்து பால் கொடுத்து வருகிறது. இச்சம்பவம் அந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாயுள்ளம் கொண்ட அந்த பசு மாட்டின் செயலை பொதுமக்கள் கண்டு பாராட்டி வருகின்றனர்.