மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த 78,240 கோவிசீல்டு தடுப்பூசிகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுக்குள் கொண்டு வர தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதனால் தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமளவு குறைந்து வருகிறது.
அதே வேளையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
அதோடு அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், தனியாா் தொழிற்சாலைகள் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றன. அதற்கு தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை. எனவே மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று பிற்பகல் மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 7 பாா்சல்களில் 220 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் 78,240 டோஸ்கள் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன.
இந்த தடுப்பூசிகள் சென்னை மற்றும் வேலூரில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை பிரித்து தனித்தனி குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா்.