கொரோனா தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியது சீரம் நிறுவனம்
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை நாடு முழுவதும் புயல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 250 ரூபாயாக இருந்த தடுப்பூசியின் விலை தற்போது மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் விற்பனையாகும் தடுப்பூசியின் விலையை விட இது மிகவும் குறைவு தான் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.