கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை - நிபுணர்கள் தகவல்!

India Corona Covid 19
By Thahir Jun 22, 2021 04:28 AM GMT
Report

 இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் பதிவானாலும், 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக உறுதிபடக் கூறமுடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை - நிபுணர்கள் தகவல்! | Covid19 India

கொரோனாவை பொறுத்தவரை ஒரு முக்கியமான மைல்கல்லை இந்தியா நேற்று கடந்தது. அதாவது, தொடர்ந்து 14-வது நாளாக நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் இருந்தது. ஒரு பகுதியில் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள தேவையை இது பூர்த்தி செய்வதாக உள்ளது.

மேலும் 88 நாட்களில் மிகவும் குறைவாக தொற்று எண்ணிக்கை 53 ஆயிரத்து 256 ஆக சரிந்துள்ளது. கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 3.83 சதவீதமாக குறைந்துள்ளது. இதெல்லாம், கொரோனா 2-வது அலை முடிவுக்கு வந்துவிட்டது, மேலும் பல தளர்வுகளை அறிவிக்கலாமே என்ற எண்ணத்தை பலருக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அவ்வளவு சீக்கிரம் சந்தோஷப்பட்டு இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப அவசரப்படக் கூடாது, பொறுமையான கவனம் அவசியம் என்று எச்சரிக்கிறார்கள், நிபுணர்கள்.

டெல்லி சிவநாடார் பல்கலைக்கழக இயற்கை அறிவியல் துறை இணை பேராசிரியர் நாகா சுரேஷ் வீரப்பு, ‘கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ள விதத்தில், 2-வது அலை உச்சத்தைத் தொட்ட அதேவேகத்தில் மறைந்துவருகிறது. ஆனால் அது இன்னும் முடிவை எட்டவில்லை. அதிகம் பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் போன்றவை தோன்றியிருக்கின்றன’ என்கிறார். அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த பிப்ரவரியில், கொரோனா முதலாவது அலை முடிந்ததைக் கொண்டாடிய நாடு, 2-வது அலை வருவதைக் கவனிக்கத் தவறிவிட்டது’ என்றார்.

‘புதிதாக தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் ெமாத்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது’ என்று பொதுக்கொள்கை நிபுணர் சந்திரகாந்த் லகாரியா கூறுகிறார். அவர் கூறுவதை ஆமோதிக்கும் விஞ்ஞானி கவுதம் மேனன், ‘கேரளா போன்ற மாநிலங்களில் இன்னும் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு அதிகமாகத்தான் இருக்கிறது.’ என்கிறார்.

கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வரவில்லை - நிபுணர்கள் தகவல்! | Covid19 India

இப்போதைக்கு, அச்சத்துடன் எதிர்நோக்கப்படும் கொரோனா 3-வது அலையை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் சுரேஷ் வீரப்பு சொல்லி முடிக்கிறார்.