கொரோனா சோதனை என மாத்திரை அளித்த மர்ம நபர்; மேலும் ஒருவர் உயிரிழப்பு

Death Covid 19 Tablet
By Thahir Jun 27, 2021 10:36 AM GMT
Report

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா பரிசோதனை என மர்ம நபர் அளித்த மாத்திரையை சாப்பிட்ட நிலையில், மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த பெருமாள்மலை, சேனாங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தர் விவசாயி கருப்பண கவுண்டர். அவருடைய மனைவி மல்லிகா. இவர்களும், இவரது மகள் தீபா, தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் ஆகிய நால்வரும் நேற்று (சனிக்கிழமை) வீட்டில் இருந்தனர்.

அப்போது, சுமார் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்வதாக இவர்கள் வீட்டுக்கு வந்து, நான்கு பேருக்கும் மாத்திரை கொடுத்துவிட்டு ஏதோ ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகு சுமார் அரை மணி நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட நான்கு பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினர் நான்கு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே மல்லிகா உயிரிழந்தார்.

குப்பம்மாள், கருப்பண கவுண்டர், தீபா ஆகிய மூவரும் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குப்பம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பண்ண கவுண்டரின் மகள் தீபாவும் உயிரிழந்துள்ளார். கொரோனா பரிசோதனை எனக் கூறி மாத்திரை அளித்த இருவரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரிசோதனை என மர்ம நபர் அளித்த மாத்திரையை சாப்பிட்டு 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.