‘கொரோன தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அரிய வாய்ப்பு’-இன்று மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா 3வது அலையை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 430051 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தடுப்பூசி முகாம்களில் ஒரே நேரத்தில் பலர் பங்கேற்பார்கள் என்பதால் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்ய அங்கன்வாடி ஊழியர்களை பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் ரோட்டரி சங்கங்கள் , தனியார் தொண்டு நிறுவனங்கள் , ஆசிரியர்கள் , வருவாய்த் துறையினர் , உள்ளாட்சி துறையினர் வாயிலாக பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.
மெகா தடுப்பூசி முகாமையொட்டி திருவண்ணாமலையில் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்படும் என பேரூராட்சி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. குலுக்கல் முறையில் முதல் பரிசாக செல்போன், இரண்டாம் பரிசாக மின்சார அடுப்பு மற்றும் மூன்றாம் பரிசாக உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை இதில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.