மதுரையில் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் முறை அறிமுகம்...
தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த முதல் அலையில் தடுப்பூசி போடத் தயங்கிய மக்கள், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த இரண்டாம் அலையில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தடுப்பூசி முகாம்களில் கூட்டம் அலைமோதுவதால், சமூக இடைவெளியைப் பின்பற்ற முடியாத அசாதாரண சூழல் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, தமிழகத்தில் முதன் முறையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையும், கோவிட் இல்லா மதுரை என்ற தனியார் அமைப்பும் இணைந்து கோவிட் தடுப்பூசிக்கான உதவி எண் மூலம் முன் பதிவு செய்யும் முறையை நாளை 02.06.2021 முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
தடுப்பூசி போட விரும்புபவர்கள் 782 399 5550 என்ற உதவி எண்ணிற்கு காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொடர்பு கொண்டு,
கோவிஷீல்டு அல்லது கோவாக்சின்
எனக் குறிப்பிட்டு பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்பவரின் எண்ணிற்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியில் குறிப்பிடும் நேரத்தில் தடுப்பூசி மையத்திற்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தெரிவித்து உள்ளார்.