தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்களை பெற நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்..!
ஓசூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன்களை பெறுவதற்காக காலை 5 மணி முதலே அரை கிலோ மீட்டர் தூரம் வரையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஓசூர் சீதாராம் நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்துவதற்கான டோக்கன்கள் இன்று காலை 7 மணி முதல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் 5 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.