இனி வாட்ஸ் அப்பிலேயே தடுப்பூசி சான்றிதழை எளிமையாக பெற முடியும் - எப்படி தெரியுமா?
கொரோனா பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகின் இயக்கத்தையே மாற்றியமைத்துள்ளது. எங்கு சென்றாலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என கறாராக நடந்துகொண்டால்தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் விட மிக முக்கியமான ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ்.
இது ஒரு பாஸ்போர்ட்டாகவே உருமாறியிருக்கிறது. சமீபத்தில் ஐரோப்பா நாடுகள் கோவிஷீல்டு போட்டுக்கொண்ட சான்றிதழ் வைத்திருந்தாலும் எங்கள் நாட்டுக்குள் நுழையவிட முடியாது என கறார் காட்டின. அதேபோல பெரும்பாலான நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை அனுமதிப்பதில்லை.
இன்றைய காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் தடுப்பூசி முகாம்களை நடத்துவதால் சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி நீடித்து வந்தது.
தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய வசதியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. நொடியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைப் பெறக்கூடிய அந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண மனிதனின் வாழ்க்கையை மாற்றலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்குப் பின் சான்றிதழ் பெற மூன்று எளிய வழிகளைப் பின்பற்றலாம்.
இதற்காக புதிதாக உதவி மைய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 90131-51515 என்ற வாட்ஸ்அப் எண்ணை உங்கள் ஸ்மார்ட்போன்களில் சேவ் செய்துகொள்ளுங்கள். பின்னர் covid certificate என டைப் செய்து அந்த நம்பரின் வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும்.
அதற்குப் பின் உங்கள் நம்பருக்கு ஒரேயொரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் One Time Password (OTP) அனுப்பப்படும். அந்த ஓடிபி நம்பரை நீங்கள் சமர்பித்தவுடன் நொடியில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Revolutionising common man's life using technology!
— Office of Mansukh Mandaviya (@OfficeOf_MM) August 8, 2021
Now get #COVID19 vaccination certificate through MyGov Corona Helpdesk in 3 easy steps.
? Save contact number: +91 9013151515
? Type & send 'covid certificate' on WhatsApp
? Enter OTP
Get your certificate in seconds.