இரவு 10 மணிவரை கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படலாம் - மத்திய அரசு கடிதத்தில் தகவல்
கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. அதேசமயம் தடுப்பூசி போடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா 2 தவணை தடுப்பூசி தவிர்த்து பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கியுள்ளது.
இதனிடையே அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரைதான் இயங்க வேண்டும் என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால், இதுபோன்று எந்த நேர கட்டுப்பாடும் நிர்ணயிக்கப்படவில்லை. தடுப்பூசி மையம் செயல்படும் நேரம், அங்குள்ள தேவையை பொறுத்தது ஆகும்.
தேவை அதிகமாக இருந்தால், கூடுதலாக குழுக்களை ஏற்பாடு செய்து தடுப்பூசி போடலாம். தடுப்பூசி மையம் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கக்கூடியதுதான். போதிய ஊழியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருந்தால், தடுப்பூசி மையம் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பூசி மையங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வரிசையிலும், காத்திருப்பு பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் புதிய மைல்கல்களை எட்டுவதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.