தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைப்பு... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 136 ஆக்சிஜன் படுக்கைகளை மருத்துவம் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2050 படுக்கைகள் உள்ளதாகவும், இங்கு கொரோனா நோயாளிகளை ஆம்புலன்சில் காக்க வைக்காமல் உடனடி சிகிச்சை அளிக்க 136 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளை பார்க்க அவர்களது உறவினர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ள கூடுதல் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாகுறை இருப்பதால், தடுப்பூசி செலுத்தும் மையங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்காக 11 லட்சம் தடுப்பூசி வந்திருப்பதாகவும், இது அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் மா. சுப்பிரமணியன் கூறினார்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்டீராய்ட் பயன்பாட்டால் நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக குறைவதால் கருப்பு பூஞ்சை ஏற்படுவதாகவும், தமிழகத்தில் தற்போது வரை இந்நோயால் 9 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.