கோயம்பேடு பூக்கடை வியாபாரிகளுக்கான தடுப்பூசி முகாம் தொடக்கம்
சென்னை கோயம்பேடு பூக்கடை வியாபாரிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பொது மக்களும் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்பேடு பூக்கடை மார்க்கெட் வியாபாரிகளுக்கான தடுப்பூசி முகாமை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வணிக பிரதிநிதிகளை அழைத்து தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தி அனைவரும் தடுப்பூசியை போட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் கடந்தாண்டை விட இந்தாண்டு கோயம்பேட்டில் கொரோனா தாக்கம் இல்லை என்றும், இதுவரை 40 ஆயிரம் பேருக்கு டெஸ்ட் எடுத்ததில் 32 பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாகவும் பிரபாகர் ராஜா கூறினார்.