பிரிட்டன் மகாராணிக்கு கொரோனா பாதிப்பு - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் கொரோனாவுடன் வாழ்வோம் என்ற திட்டத்தை அந்நாட்டு அரசு கையிலெடுத்துள்ளது. இதன்படி அடுத்தவாரம் முதல் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கையை பிரிட்டன் அறிவியல் அமைப்புகள் விமர்சித்துள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 10 ஆம்தேதி இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே 2 நாட்களுக்கு முன்பாக பக்கிங்ஹாம் அரண்மனையில் தாயார் எலிசபெத்தை இளவரசர் சார்லஸ் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் மகாராணி எலிசபெத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எளிதான பணிகளை மேற்கொள்வார் என்றும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
95 வயதாகும் எலிசபெத் பிரிட்டன் மகாராணியாக வெற்றிக்கரமாக தனது 70வது ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மகாராணி விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எதிர்க்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.