வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Covid Lockdown Sunday Minister Cancel Announce
By Thahir Jan 23, 2022 04:07 PM GMT
Report

தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும்நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30,000 மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையின் மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்திய பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“கடந்த 2 வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களும் சிறப்பாக ஒத்துழைப்பு தருகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் எடுக்கும் ஊரடங்கு முடிவுகளுக்கு நல்ல வரவேற்பை மக்கள் தருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், நேற்றைக்கும் இன்றைக்குமான மாதிரிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் இல்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கே பிரச்னை ஏற்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை 9 ஆயிரம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது நிறைவைத் தருகிறது.

இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது ஆறுதலான விசயமாக உள்ளது.

எனவே, தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது, முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கும். எனவே,கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.