"பொங்கல் பண்டிகைக்கு பின் கிராமங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கிராமங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும், எனினும் அச்சப்படத்தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பொங்கல் பண்டிகைக்கு பின் கிராமங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆனாலும் அச்சப்படத்தேவையில்லை. தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் 104 எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், அமித்ஷாவை தமிழகத்தின் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பிற்கு பிறகு நீட் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய மா.சுப்பிரமணியன்,
மத்திய கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் ஆலோசித்த பின்னர் இது குறித்து கூறுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார் என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், நீட் விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தபோது, நீட் தேர்விற்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
தான் சார்ந்துள்ள ஒரிசா மாநிலத்திலும் எதிர்ப்பு உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியாவில் தற்போது போலியோ இல்லை என்றும், எனவே கொரோனா பரவல் காரணமாக போலியோசொட்டு மருந்து முகாம் ஒரு மாதம் தள்ளிவைப்பதால் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் கூறினார்.