இம்மாத இறுதியில் உச்சம் தொடும் ஒமைக்ரான் பரவலின் மூன்றாவது அலை - ஆய்வில் தகவல்

india covid spread will get peak january end february start
By Swetha Subash Jan 07, 2022 02:41 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஒமைக்ரான் பரவல் மூன்றாவது அலையை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள நிலையில் எப்போது ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை தொடும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா பரவல் ஏறக்குறைய முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்ததில் இருந்து வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு எப்போது குறையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொரோனா, டெல்டா, ஒமைக்ரான் என எந்தவொரு உருமாற்றம் அடைந்த வைரஸாக இருப்பினும், அது குறைய வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக உச்ச நிலையை தொட வேண்டும்.

இதுதொடர்பாக இந்திய அறிவியல் நிறுவனமும், இந்திய புள்ளியியல் நிறுவனமும் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒமைக்ரான் பரவலின் மூன்றாவது அலை இம்மாத இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் உச்ச நிலையை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் படிப்படியாக குறைந்து, மார்ச் மாதத்தில் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரலாம். டெல்லியை பொருத்தளவில் ஜனவரி மாத நடுப்பகுதியில் அல்லது மூன்றாவது வாரத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும்.

தமிழ்நாட்டை பொருத்தளவில், ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரியில் முதல் வாரத்தில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது. இதன்பின்னர் படிப்படியாக பாதிப்பு குறையத் தொடங்கும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்று, தடுப்பூசிகள் ஏற்படுத்திய ஆக்கப்பூர்வமான விளைவுகள், மக்கள் மத்தியில் பாதிப்பு எளிதாக பரவுத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒமைக்ரானின் பரவல் மிக எளிதாக இருப்பதால் உச்சத்தை தொடும்போது நாள் ஒன்றுக்கு 6 லட்சம் முதல் 10 லட்சம்பேர் வரையில் பாதிப்பு அடைவார்கள்.

இந்தியாவில் கடந்த மாத இறுதியில் இருந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதேபோன்று ஐஐடி கான்பூரும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

இதில், ஒமைக்ரான் பரவலின் மூன்றாவது அலை பிப்ரவரி 3-ம்தேதிக்குள் உச்சத்தை தொடும் என்று கூறப்பட்டுள்ளது.