இந்தியாவில் இரவு நேர ஊரடங்கு: எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா? முழு விபரம்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருவதால், பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த முழு விபரங்களுடன் அறிந்து கொள்வோம்,
ஹரியானாவில் திங்கள்கிழமை முதல் ஹரியானாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அம்மாநில உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேசத்திலும் திங்கள் கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது ஏப்ரல் 19-ம் தேதி வரை நடை முறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்ராவிலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் வார இறுதி நாள்களில் முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முக்கிய முடிவுகள் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் அமலில் இருந்து வருவதாக அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த உத்தரவு வரும்வரை தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாவட்ட மேஜிஸ்ட்ரேட் நவநீத் சிங் சாஹல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏப்ரல் 30-ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளை தவிர்த்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.