கொரோனா பாதித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை! மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு!
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சுப்பரமணி என்பவரின் மனைவி மீனாட்சி இருமல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அரசு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் குழந்தையின்மை காரணமாக ICSI முறையில் கருத்திரித்தார். ஸ்கேன் மூலம் இவருக்கு இரட்டை குழந்தை உண்டாகி இருப்பது தெரிய வந்தது.
ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு குறைபாடு நோய்க்காகவும் சிகிச்சையில் இருந்த இவருக்கு 30 வாரம் கர்ப்ப காலத்தின் போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் இவருக்கு மருத்துவர்களில் ஆலோசனைப்படி ரெம்டெசிவர் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் நெஞ்சக பகுதிக்கு CT ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் 30% நுரையீரல் பாதிப்பு கண்டறியப்பட்டது. நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பகுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.
பிரசவ வலி ஏற்பட்டபோது முதல் குழந்தை தலை திரும்பாமல் இருந்ததாலும் நீண்ட கால குழந்தையின்மை காரணமாகவும் அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இரண்டு குழந்தைகளும் நலமுடன் பிரசவிக்கபட்டன. முதலாம் ஆண் குழந்தை 2.2 கிலோ எடையுடனும் இரண்டாம் பெண் குழந்தை 2 கிலோ எடையுடன் நலமாக பிறந்தன.
தனியாக கர்ப்பம் தரித்த கொரோனா நோயாளியை தீவிரமாக கண்காணித்து தற்போது நலமாக பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.