கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சி..!
ஆந்திராவில், ஆனந்தையாவை தொடர்ந்து கொரோனா மருந்து தயாரிக்க திருமலை திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத அமைப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ண பட்டினத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையா , 18 வகையான மூலிகைகளை பயன்படுத்தி நாட்டு மருந்து ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த மருந்தை அவர் தனக்கு தெரிந்தவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட கொரோனா நோயாளிகளுக்கும் வழங்கி வருகிறார்.

அவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட கொரோனா நோயாளிகள் பலர் ,தாங்கள் நோயில் இருந்து விடுபட்டு உடல்நிலை சீரடைந்து வருவதாக கூறியுள்ளனர். இந்த தகவல்கள் ஊடங்களில் வேகமாக பரவியது. இதனால் கொரோனாவுக்கு மருந்து வாங்க பல்லாயிரக்கணக்கானோர் கிருஷ்ணப்பட்டிணத்தில் குவிந்தனர்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் மூலம் ஆனந்தையாவின் நாட்டு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திர மாநில சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார். மாநில சுகாதாரத்துறை எடுத்த முயற்சிகளை தொடர்ந்து கிருஷ்ணபட்டினம் வந்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ஆயுஷ் அதிகாரிகள், ஆனந்தைய்யாவிடம் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலிகைகள், தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் ஆய்வுக்காக மருந்து தயாரிப்பில் ஆனந்தைய்யா பயன்படுத்திய மூலிகைகள், அவர் தயாரித்த மருந்து ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளனர்.
இந்தநிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆயுர்வேதக் கல்லூரி, ஆயுர்வேத மருந்து தயாரிப்பு கூடம், ஆகியவற்றை சேர்ந்த மருத்துவர்கள், நிபுணர்கள் கொண்ட குழு கிருஷ்ணாபட்டிணம் சென்று ஆனந்தைய்யாவிடம் மருந்து தயாரிப்பு முறைகள், மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் பற்றிய விபரங்களைக் கேட்டு அறிந்துள்ளனர்.