கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் சிறைத் தண்டனை - மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது . கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் பல நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவை முதற்கட்டமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பலர், கருத்துகளை தெரிவித்து வந்தனர். உரிய தரவுகள் இன்றி அவசர கதியில் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு, வதந்திகளை பரப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், 'இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
ஆகையால் கொரோனா தடுப்பூசிகள் குறித்து தனிநபரோ, அமைப்போ அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.
அந்த நடவடிக்கையின்படி சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரியவருகிறது.