நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி ஆரம்பம்
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு செலுத்தப்படுகிறது. சீனாவின் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரானோ வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.
அதே சமயம் கொரோனாவை கட்டுப்படுத்த பல் வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன, இந்தியாவில் தயாரிக்கும் பணியும் வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியது.
பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார். அந்த வகையில் இன்று முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான முன்கள பணியாளர்கள் சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்.
அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.