கொரோனா காலக்கட்டத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரிப்பு..! தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை..!
கொரோனா கால கட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் 20 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சமூக நலத்துறை செயலாளர் ஷம்பு கலோலிகர் உள்ளிட்ட சமூக நலத்துறையின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவு நடந்துள்ளதாகவும், குறிப்பாக 2020ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 40% அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும், இதனைப் பயன்படுத்தி சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் இன்று 20 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.