கொரோனாவால் உயிருக்கு போராடிய குழந்தை - வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து காப்பாற்றிய செவிலியர்
கேரளா அருகே கொரோனா பரவலால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த செவிலியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த நேரத்தில், இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவசர அவசரமாக தூக்கி வந்துள்ளார். குழந்தையை கையில் வாங்கிய செவிலியர், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்தார்.
இந்த நிலையில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் தேவை என்பதை அறிந்து அவரே குழந்தையின் வாயோடு வாய் வைத்து சுவாசம் அளித்து குழந்தைக்கு முதலுதவி அளித்தார்.
இதனால் குழந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்ததால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் உடனடியாக முதலுதவி அளித்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் அந்த செவிலியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.