கோவாக்சின் தடுப்பூசியின் விலையைக் குறைத்தது பாரத் பயோடெக் நிறுவனம்..எவ்வளவு தெரியுமா?

vaccine rate covaxin decrease
By Praveen Apr 29, 2021 01:29 PM GMT
Report

மாநில அரசுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி விலையை 600 ரூபாயில் இருந்து 400 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.

தனியார் மருத்துவமனைகள், மாநிலஅரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விலை அளவுக்கு கட்டுப்பாடு ஏதும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை. இதையடுத்து கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தனது விலை விவரத்தை வெளியிட்டது. இதன்படி, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் விலை ரூ.600 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 ஆகவும் விலை நிர்ணயித்தது.

கோவிஷீல்ட் மருந்தின் அதிகபட்சவிலை (2டோஸ்சேர்த்து) ரூ.600 ஆக இருக்கும் நிலையில், கோவாக்சின் விலை ரூ.1,200ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்தநிலையில் மாநில அரசுகளுக்கான விலையை ரூ.400 ஆக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது. ஒரு டோஸ் கோவேக்ஸின் தடுப்பு மருந்தின் விலை 400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 12.76 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளது என மத்தியஅரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.