தமிழகத்துக்கு கூடுதலாக 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்..!
தமிழகத்திற்கு மேலும் 1.4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசு 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை ஹைதராபாத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 12 பார்சல்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் இன்று சென்னை வந்தடைந்தன. விமானத்திலிருந்து இறக்கப்பட்ட 350 கிலோ தடுப்பூசி மருந்துகளும் சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
