பேரக்குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய பாட்டி - கோவையில் நடந்த கொடூரம்
கோவையில் பேரக்குழந்தையை கொன்று, பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் குடியிருந்து வரும் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. இதில் ஆண் குழந்தைக்கு ஆரியன் என்றும், பெண் குழந்தைக்கு ஆரிகா ஸ்ரீ என்றும் பெயரிட்டிருந்தனர்.
மேலும் குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக மதுரையில் இருந்து ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தியும் இவர்களுடன் தங்கியிருந்தார். கடந்த 2 மாதமாக சாந்தி குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த சாந்தி குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டதாக என தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் பிறப்புறுப்பில் காயங்களுடன் கிடந்துள்ளது. பெண் குழந்தை வீட்டில் கழிப்பறைக்குள் அழுக்கு துணியால் வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதேசமயம் பாட்டி சாந்தி வீட்டில் இருந்து தப்பி ஓட்டியுள்ளார்.இது குறித்து ஐஸ்வர்யா அவரது கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.