வாட்ஸ்அப்பில் ஆசிரியர் தொல்லை - 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
கோவையில் பாலியல் தொந்தரவால் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கோட்டைமேடு பகுதியில் வசித்து வந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் படித்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த மாணவி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த உக்கடம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதேசமயம் உயிரிழந்த மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று போலீஸாரிடம் சிக்கியிருக்கிறது.
மேலும் மாணவி இதற்கு முன்னதாக கல்வி பயின்று வந்த சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.பள்ளி ஆசிரியரின் பாலியல் சீண்டல்களால் தான், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அவர் உறவினர்களும், சக மாணவர்களும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். பள்ளியில் பல மாணவிகளுக்கும் அந்த ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
மாணவி எழுதியிருக்கும் கடிதத்தில், ``யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது" என்று குறிப்பிட்டிருக்கிறார். எனினும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.