கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு - அதிமுக மனுவை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனு பிழையுடன் உள்ளதால் உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்தது.
கே.என்.நேரு
தமிழ்நாடு அரசு அமைச்சர் கே.என். நேரு சுமார் 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்குக் அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யுமாறு அதிமுக எம்.பி. இன்பதுரை,

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடிப்படையாக வைத்து உடனடியாக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை தெளிவாக கூறியுள்ளதாகவும் இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென டிசம்பர் மாதம் 13ம் தேதி புகாளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்து நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நடைமுறை பிழைகளுடன் தாக்கல் செய்துள்ளதால் அதனை பிழைகளை திருத்தம் செய்ய கோரி
மனுவை உயர்நீதிமன்ற பதிவுத்துறை திரும்ப அளித்துள்ளது. மேலும் மனுவில் உள்ள பிழைகளை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்தால் வழக்கு எண்ணிடப்படும் என அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.