மீண்டும் விசாரணைக்கு வரும் முக்கிய வழக்கு: அடுத்த சிக்கலில் ஆதவ் அர்ஜுனா!
நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி அதற்கு அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், பழைய வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமையானது ஆதவ் அர்ஜுனாவுக்கு மீண்டும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து ஆதவ் அர்ஜுனா தளது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், , இலங்கை, நேபாளம் போல், அரசின் அடக்குமுறைக்கு எதிராக gen z புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார். அதனால் ஆதவ் அர்ஜுனா மீது, வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு நவம்பரில் குறித்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, புகார்தாரரான எல்.ஐ.சி ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குறித்த மனுவானது விசாரணைக்கு உகந்ததே எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என குறிப்பிடப்படுகின்றது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா. அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும் கண்டனடும் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் ரஜினிகாந்த் "காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும்" என பதில் கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் ரஜினி குறித்து பேசியமைக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான பழைய வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருப்பது அவருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.