கோவை மாநகராட்சிக்கு நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி.!
கோயமுத்தூர் மாநகராட்சியில் சிக்கல் ஏற்படும் வகையில் வெற்றிச் சான்றிதழில் பேனாவால் எழுதப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19இல் நடந்த தேர்தல் நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து கொண்டாட்டமான வெற்றியை மாமன்ற உறுப்பினர்கள் பெறும் நிலையில் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பால் சற்று கலங்கியுள்ளனர்.
தங்களது பலத்தை நிருபித்திட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் வார்டுகளி வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
சில இடங்களில் இவை பறிமுதல் செய்யப்பட்டன. பெயருக்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் இந்த விநியோகம் நடந்தது என்றே கூறப்படுகிறது.
இவ்வாறு வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வைத்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம், இந்த தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தல் நடத்த வேண்டும்;
பதிவான ஓட்டுக்களை எண்ணக்கூடாது என்று கோரி, ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த ஐகோர்ட், 'ஓட்டு எண்ணிக்கைக்கு தடையில்லை;
ஆனால் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு, இந்த வழக்கின் இறுதி முடிவுக்குக் கட்டுப்பட்டது' என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில்,
கோவை மாநகராட்சியில் நேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வெற்றிச் சான்றிதழில், 'ஐகோர்ட் வழக்கு எண் : 3937.2022 முடிவுக்கு உட்பட்டது' என்ற வார்த்தை, பேனா மையில் எழுதப்பட்டுள்ளது.
இதனால், வெற்றிக்கான சான்றை கையில் வாங்கியவர்களுக்கு, அதிலுள்ள வார்த்தை ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் இந்த தீர்ப்பின் முடிவால், ஜெயித்தவர்களுக்கு அல்லது ஒட்டு மொத்த மாமன்றத்துக்கே சிக்கல் ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது.