சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கு ; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

சிறுமியை கடத்திச் சென்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மூட்டை தூக்கும் தொழிலாளியான 33 வயதான சேட்டு.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு கிச்சிபாளையம் பகுதியில் உள்ள எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த பிளஸ் 1 படித்து வந்த மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார்.

மகளை காணவில்லை என பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். எங்கும் கிடைக்காததால், பின்னர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில், கூலித்தொழிலாளி சேட்டு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார், கூலி தொழிலாளியான சேட்டுவை கைது செய்து , கடத்தல், குழந்தை திருமணம், போக்சோ பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில், சிறுமி தற்கொலை செய்து இறந்து போனார்.

இதில் சிறுமியை கடத்திச்சென்று குழந்தை திருமணம் செய்து ஏமாற்றிய கூலித் தொழிலாளியான சேட்டுக்கு ஆயுள் தண்டனையும், முப்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சேட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்