“நீங்கள் ஏன் எங்களுக்கு அடங்கவே மாட்டுறீங்க” – மத்திய அரசை விளாசித் தள்ளிய உச்ச நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்தாமல் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாகவும், இதனால் பல முக்கிய வழக்குகளை முடிக்க முடியாமல் நீதிமன்றங்கள் திணறி வருகின்றது என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் குழு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளைப் பரிந்துரை செய்யும். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இதில்தான் தாமதம் செய்வதாக நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன், ரிஷிகேஷ் ராய் அமர்வு கூறியதாவது -
டெல்லி உயர் நீதிமன்றத்தில் 60 நீதிபதிகள் வேலையில் பணியாற்ற வேண்டும். ஆனால் 29 நீதிபதிகளே இருக்கின்றனர். கொலிஜியத்தின் பரிந்துரைக்கு மத்திய அரசின் கீழ்ப்படியாததே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
கொலிஜியம் பரிந்துரைகள் மீது முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் வகுத்த காலக்கெடுவையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் கொலிஜியத்துக்கு வந்து சேர மாதங்கள், ஏன் பல ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால், கொலிஜியம் இறுதி செய்து அளித்த பரிந்துரைகளை நிறைவேற்றவும், செயல்படுத்தவும் அதன்பின் மாதங்கள், ஆண்டுகள் தாமதமாகிக்கொண்டே செல்கின்றன.
நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், முக்கிய வழக்குகள் விரைவாகத் தீர்ப்பு வழங்க முடியாமல் போகிறது. நீதிமன்றங்கள் சில வழக்குகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் எடுத்து விசாரிக்க முடியாமல் போவதற்கும், அதனால் இழப்புகள் ஏற்படுவதற்கும், போதுமான அளவு நீதிபதிகளை நியமிக்கப்படாமல் இருப்பதன் விளைவுதான்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.