ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி; 7 நாட்களில் பூஜை - நீதிமன்றம் உத்தரவு!
மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதி
உத்தர பிரதேசம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னர்கள் மசூதி கட்டியதாக எழுந்த சர்ச்சை பேசுபொருளானது.
மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதி கோரி 5 இந்துப் பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கள ஆய்வு நடத்த மாவட்ட நீதிபதி அஜயா கிருஷ்ண விஷ்வேஷா உத்தரவிட்டார்.
இந்துக்களுக்கு அனுமதி
அதன் அடிப்படையில், மொத்தம் 2150.5 சதுர மீட்டர் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட்டது. அதில், இந்து கோயில் இருந்துள்ளது. மேற்கு பகுதியில் தற்போதுள்ள சுவர், இந்து கோயிலின் மீதமுள்ள சுவர். கிடைத்த கல்வெட்டுகள், சிற்பங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் அங்கு ஏற்கெனவே கோயில் இருந்ததை காட்டுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் 7 நாட்களுக்குப் பின்னர் ஞானவாபி மசூதி கீழ் பகுதியில் இந்துக்கள் பூஜைகளை நடத்தலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.